Thursday, August 13, 2009
திராவிடப் பல்கலைக்கழகம்
திராவிட மொழிகள் உலகின் மிகப் பழமையான மொழிக் குடும்பங்களில் ஒன்றாகும். திராவிட மொழிகளாக 27 மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று தற்காலம் வரை சிறப்பான வரலாற்றையும் பெருமையையும் உடையதாக உள்ளன. இம்மொழிகள் கால மாற்றங்களினால் தனித்தனியாக பிரிந்து, தனித்தனி வரலாற்றை உருவாக்கி கொண்டன. மேலும் திராவிட இனமாக ஒன்றுப்பட்டு இருந்த மக்கள் அனைவரும், மொழி சார்ந்து பிரிய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் திராவிட மொழிகளின் பொதுவான பண்புகள், சிறப்புகள் மற்றும் இவற்றிட்கு இடையே உள்ள தொடர்புகளை அறியவும், அதன் மூலம் உயர்வான பல இலக்குகளை அடையவும் ஒரு அமைப்பு தேவைப்பட்டது. இந்த தேவையை நிறைவு செய்யவும் திராவிட மற்றும் தேசிய ஒருமைபாட்டுக்கு ஆதாரமாகவும் உருவாக்கப்பட்டதே "திராவிடப் பல்கலைக்கழகம்".
இப்பல்கலைக்கழகம் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு இணைப்புப் பாலம் போல் இருக்கின்ற "குப்பம்" என்ற நகரத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள் பேசும் மக்கள் இங்கு வசிப்பதால் இது "மும்மொழி சந்திப்பு" என்றே அழைக்கப்படுகிறது. இதனால் திராவிட பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது சிறப்பான பொருளை கொள்கிறது. 'திராவிடப் பல்கலைக்கழகம்' 1997-ம் ஆண்டு ஆந்திர அரசால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
திராவிடப் பல்கலைக்கழகம், எல்லா திராவிட மொழிகளுக்கும் உள்ள பொதுவான பண்பாட்டு, இலக்கிய மற்றும் வரலாற்று அடிப்படைகளை கண்டறிவது மற்றும் அதனை மேம்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறது. பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கம் திராவிட மொழிகளுக்கு இடையே ஒருமைப்பாட்டை உருவாக்குவதாகும். மொத்தம் 27 மொழிகள் திராவிட மொழிகளென அறியப்பட்டாலும் அவற்றில் நான்கு மொழிகள் மட்டுமே எழுத்துகளுடன் நிலைப்பெற்றுள்ளன. சரியான எழுத்து வடிவத்தை அடையாத, சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்களால் பேசப்பட்ட மற்ற திராவிட மொழிகள் முழுமையாக வளர்ச்சியடையாமல் போய்விட்டன. இவ்வாறு சரியான எழுத்து வடிவம் பெறாமல் வளமையான பேச்சு வழமையை மட்டும் கொண்டுள்ள திராவிட மொழிகளுள் 'துளு' மொழியும் ஒன்று. பேச்சு வழக்கில் மட்டும் உள்ள மொழிகள் இத்தனைக் காலம் தாக்குப் பிடித்திருந்தாலும் அதனை பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவ்வகையில் வழக்கொழிந்து வரும் திராவிட மொழிகளை காக்கவும் மற்றும் வளர்ச்சியடைந்த திராவிட மொழிகளுக்கு இடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவும் வேண்டியது வரலாற்று அவசியமாகும். இத்தேவையை நிறைவு செய்யக்கூடிய விதமாக உருவாக்கப்பட்டுள்ளது திராவிடப் பல்கலைக்கழகம். இதற்கான செயல்களை செய்வது இன்றைய தலைமுறையின் மிகவும் முக்கியமான கடமையும் ஆகும். தற்போது 'துளு' மொழியில் கல்விப் பிரிவுகளை திராவிட பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
திராவிட பல்கலைக்கழகம் சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்களால் பேசப்பட்ட மற்ற திராவிட மொழிகளின் வளர்ச்சிக்கு துணை செய்யும் வகையில் அம்மொழிகளில் கற்றல் கருவிகள், வாய்ப்புகள் போன்றவற்றை உருவாக்கி வருகிறது. கூடவே அந்தந்த மொழி சார்ந்த அடையாளங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு பலதரப்பட்ட முயற்சிகளால் திராவிட மொழிகளின் அடிப்படைகளிலும், திராவிட பண்பாட்டு கூறுகளிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு அதனை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் செயல்பட்டு வருகிறது திராவிட பல்கலைக்கழகம். திராவிட பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாவது, திராவிடத்துவத்தின் உலகளாவிய பார்வை, உயர்கல்வி ஆக்கம் மற்றும் கிராம மற்றும் பின் தங்கிய மக்களின் முன்னேற்றம் ஆகியவை ஆகும்.
மேலும் திராவிட பல்கலைக்கழகம் உருவாக்கப் பட்டதன் பின்னணியில், தேசிய அளவில் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கமும் உள்ளது. இப்பல்கலைக்கழகம் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து எளிதில் அடையக்கூடிய தொலைவில் உள்ளது. தற்போது இங்கு திராவிட "கலைகள் மற்றும் பண்பாடு - ஒப்பீடு, கல்வி மற்றும் மனித வள மேம்பாடு, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திராவிட இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை முறை நோய் தீர்வு" ஆகிய தனித்தனி துறைகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு துறையும் அதனுள் மேலும் சில பிரிவுகளை கொண்டிருக்கிறது. தவிர "பிராசரங்கா" என்ற பதிப்பு பிரிவும், "அனுஸ்ருஜான" என்ற மொழிப்பெயர்ப்பு பிரிவும் உள்ளன.
திராவிட மொழி சார்ந்த புத்தகங்கள், உரைகள், கட்டுரைகள் போன்றவற்றை நான்கு முக்கியமான திராவிட மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்படுகின்றன. மேலும் திராவிட சார்ந்த கல்வியை பிரபலமாக்க மற்ற இந்திய மொழிகளிலும் இவ்வகை வெளியீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மொழிமாற்றத் துறையை சார்ந்த வரை இப்பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய துறையாக உள்ளது. ஏனெனில் ஒருமைப்பாடு என்பது ஒவ்வொரு மொழியும் அதன் இலக்கிய மற்றும் எழுத்து வளத்தை மற்றொன்றோடு பரிமாறிக் கொள்வதில் அடங்கியிருக்கிறது. இவ்வகையில் ஒரு மொழியில் உள்ள வளங்கள் மற்ற திராவிட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. மேலும் திராவிட மொழிகளுக்கு பொதுவான சொல்கள், திராவிட மொழிகளுக்கு பொதுவான அகராதிகள் போன்றவற்றை உருவாக்கும் முயற்சியிலும் திராவிட பல்கலைக்கழகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் பல ஆய்வுத் திட்டப் பணிகளும் வேகமாக நடைப்பெற்று வருகின்றன.
இவை தவிர படிக்கும் மாணவர்கள், ஆய்வு செய்யும் மாணவர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு விருதுகளையும், உதவித் தொகையையும், பரிசுத் தொகைகளையும் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகம் சிறப்பான வளர்ச்சியை அடைவது திராவிட மொழிகளுக்கும், ஒன்றுப்பட்ட திராவிட பாரம்பரியத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். திராவிட மொழிகளின் ஒருமைப்பாட்டையும் திராவிட பண்பாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒரே இடத்தில் கற்கவும், ஆய்வுகள் செய்யவும், மேம்படுத்தவும் ஆதாரமாக விளங்கும் திராவிடப் பல்கலைக்கழகம் விரைவாக அதன் இலக்குகளை அடையவும், மேலும் பலமடங்கு விரிவடையவும் வாழ்த்துவோம்.
இப்பல்கலைக் கழகத்தை பற்றிய மேலும் விவரங்களுக்கு http://www.dravidianuniversity.ac.in என்ற இணையத்தள முகவரியை காணவும்.
நன்றி : இணைய நூலகம்
No Response to "திராவிடப் பல்கலைக்கழகம்"
Post a Comment