Wednesday, August 12, 2009

பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும்-1

Posted on 9:47 PM by கதம்பம் வலைப்பூ


பறக்கும் தட்டுக்கள், அயல் கிரகவாசிகளின் வருகை போன்றவை நிஜம்தானா அல்லது பார்த்ததாகக் கூறுபவர்களின் கற்பனையா என்று இன்னமும் அறுதியிட்டுத் தீர்க்கமாகக் கூற முடியவில்லை- இது போல் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத, ஆராய்ச்சியினாலும் உறுதி செய்யப்படமுடியாத அன்னியத் தோற்றங்களை UFO ( Unidentified Flying Objects) என்று சொல்கிறார்கள் இப்படிப்பட்ட அபூர்வமான பொருட்கள் ஆங்காங்கே காட்சியளிப்பதாக பன்னெடுங்காலங்களாக செய்திகள் பரவிவந்தாலும் 1947ம் ஆண்டுக்குப் பிறகுதான் இதைப்பற்றிய அதிகமான செய்திகள் உலகின் பார்வைக்கு வரத் துவங்கின.

1947ம் ஆண்டில் அமெரிக்காவில் வானில் பறக்கும் தட்டைக் கண்டதாக வந்த செய்திக்குப் பிறகு உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தாங்களும் அத்தகைய பொருட்களைக் கண்டதாக வெளியில் கூறத் துவங்கினர். இன்னும் பலர் பார்த்திருந்தால் கூட வெளியே சொன்னால் ஏளனம் செய்வார்களோ என எண்ணி வெளியே சொல்லாமல் கூட இருந்திருக்கலாம். உலகம் முழுதும் UFO என்றாலே வேற்று கிரகத்திலிருந்து பூமிக்குள் நுழைந்துள்ள ஒரு வான ஊர்தி என்றே நம்பினார்கள் - பெரும்பாலும் பறக்கும் தட்டுக்கள் என்று அவற்றைக் குறிப்பிட்டார்கள்.

இன்று நேற்றல்ல - மிகப்பழைய காலம் முதலாகவே இதுபோன்ற அபூர்வக் காட்சிகளை வானில் பார்த்ததாகச் செய்திகள் உள்ளன. இவைகளில் பல வழக்கமாக ஏற்படும் வால் நட்சத்திரங்கள், எரிகற்கள் போன்று வானவியல் மாற்றங்களாக இருக்கலாம். கி.மு1450ல் ஐந்து மீட்டர் அளவு கொண்ட, சூரியனை விடப் பிரகாசமான ஒளிவட்டங்களை வானில் கண்டதாகவும் அவை பல நாட்கள் தோன்றியதாகவும் பின்னர் உயரே சென்று மறைந்ததாகவும் செய்திகள் உள்ளன. ரோமானிய சிரியர் ஜூலியஸ் ப்சிக்வின்ஸ் கி.மு 99ம் ஆண்டு சூரியன் மேற்குதிசையில் மறையும் வேளையில்ஒரு உருண்டையான பொருள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். 1561ம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள நியூரம்பெர்க் நகரில் ஏதோ ஒன்றுக்கொன்று கடும் சண்டையிட்டுக் கொள்வது போல வானில் இங்கும் அங்கும் பறந்து செல்லும் பல்வேறு வினோதப் பொருட்கள்- ஒரு பெரிய சிலிண்டரிலிருந்து பல கோளங்களும் தட்டுக்களும் (பீரங்கியிலிருந்து குண்டுகள் பாய்வதுபோல்) வெளிவந்தனவாம். இவையெல்லாம் என்னவோ விபரீதமாக நடக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாகவோ கெட்ட சகுனமாகவோஅல்லது தேவதைகள் வானில் காட்சி அளிப்பதாகவோ கருதப்பட்டு வந்தன. இந்தச் செய்திகள் எல்லாம் இன்றும் கூட பறக்கும் தட்டுக்களைப் பார்த்ததாகச் சொல்லப்படும் செய்திகள் போன்றவைதான் என்று UFO பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் சொல்கிறார்கள்.

1870ம் ஆண்டு சிலி நாட்டிலுள்ள கோபியபோ நகரில் ஜான் மார்டின் என்ற விவசாயி
வானில் கருப்பான உருண்டையாக பலூன் போல் காட்சியளித்த பொருள் ஒன்று படுவேகமாகப் பறந்து செல்வதைப் பார்த்ததாக உள்ளூர் தினசரி ஒன்று குறிப்பிட்டிருக்கிறது. 1882ம் ஆண்டில் கிரீன்விச் அப்செர்வேடரியின் குறிப்புகளில் "'ஒரு வட்ட வடிவான' 'அரிதான வானுலக விருந்தாளி' யைப் பற்றிய் குறிப்பு காணப்படுகிறது. இது எரிநட்சத்திரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் கூறியது. இந்த அதிசய நிகழ்வை ஐரோப்பாவைச் சேர்ந்த இன்னும் பல வானசாஸ்திர ஆராய்ச்சியாளர்களாலும் கண்டதாகச் சொன்னார்கள். 1904ம் ஆண்டு அமெரிக்காவின் கப்பற்படையைச் சேர்ந்த மூவர் தாங்கள் வானில் கண்ட அதிசயத்தைப் பற்றிக் கூறினர். மூன்று பிரகாசமான சிவந்த உருண்டையான சாதனங்கள் அணிவகுத்து மேகங்களுக்குக் கிழே சென்றதாகவும் பின்னர் பாதை மாறி விண்ணை நோக்கிப் பறந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். அவை நம் பார்வையில் தெரியும் சூரியனை விட ஐந்து அல்லது நூறு மடங்கு பெரியவையாய் இருந்தனவாம்.

1926ம் ஆண்டு சூரியனைவிடப் பெரிய அளவில் மிகுந்த பிரகாசமாக கோளவடிவத்தில் ஒரு சாதனம் வெகுவேகமாகச் சென்றதாக ஒரு செய்தி. 1942ல் கலிபோர்னியாவில் ஒரு அடையாளம் தெரியாத விமானம் வானிலேயே நிலைத்து நின்றதாக வேறு ஒரு செய்தி என்று இப்படிப் பல செய்திகள் உலவின. இதில் கலிபோர்னியா சம்பவம் "லாஸ் ஏன்ஜலீஸ் யுத்தம்" என்று சொல்லப்பட்டது.

இதே நேரத்தில் ஸ்கான்டினேவியன் நாடுகளில் இதே போன்று அடையாளம் தெரியாத விமானங்களைக் கண்டதாக கிட்டத்தட்ட 2000 செய்திகள் வந்தன. இது தவிர •பிரான்ஸ், போர்ச்சுகல், இத்தாலி, கிரேக்க நாடுகளிலிருந்தும் தகவல்கள்- ஜெர்மனியில் சண்டையின் போது கைப்பற்றிய ராக்கெட்டுகளில் ரஷ்யா நடத்திய சோதனைகள்தான் இவை எனக் கருதப்பட்டதால் இந்த நிகழ்வுக்கு "ரஷ்யப் பொழிவு" என்று பெயர் சூட்டினர். ஆனால் உண்மையில் ரஷ்யர்கள் நடத்திய சோதனையல்ல என்று பின்னால் தெரிந்தது. இன்னும் இந்த நிகழ்விற்கான சரியான விளக்கம் கிடைக்கவில்லை. இத்தகைய விமானங்களில் கிட்டத்தட்ட 200 விமானங்களை ரேடாரிலும் காண முடிந்தது. எனவே அந்தச் செய்திகள் உண்மையானவையாகவே இருந்திருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. மற்றவை யாவும் எரிகற்கள், வால் நட்சத்திரங்கள் இவற்றைப் பார்த்துவிட்டுத் தவறாகப் புரிந்துகொண்டதால் இருந்திருக்கலாம்.

(பறக்கும் தட்டுகளின் பயணம் தொடரும் )

நன்றி : இணையம்,நண்பர்கள்,நூலகங்கள்


2 Response to "பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும்-1"

.
gravatar
Subbzz Says....

Fantastic post!!! Please post similar to this topic often!!

.
gravatar
வடுவூர் குமார் Says....

நான் இதுவரை பார்த்ததில்லை ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என் மனைவி சென்னையில் மொட்டை மாடியில் உட்கார்ந்திருக்கும் போது மிகப்பெரிய வான்கலம் ஒன்றை தலைக்கு மேல் சில நொடிகளே பார்த்ததாகவும் அதை உறுதிப்படுத்த சற்று வேறு பக்கம் பார்த்துவிட்டு மேலே பார்க்கும் போது காணாமல் போய்விட்டதாகவும் சொன்னார்கள்.
மற்றொன்று 2 மாதங்களுக்கு முன்பு
அதே மாடி இரவு 9 மணி இருக்கும். நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம்.சட்டென்று ஒரு சின்ன வெளிச்சம் நீட்டு சதுர வடிவில் கீழிருந்து கிளம்பி போனது.அது எனக்கு நான் உட்கார்ந்திருக்கும் நிலையில் பின்பக்கம் கண்ணுக்கு ஓரத்தில் சிறு கீற்றாக தெரிந்தது.சரி நமக்கு தான் கண்ணில் பிரச்சனை போல் என்று மனைவியிடம் கேட்கவில்லை ஆனால் அவர்கள் சற்று நேரத்தில் என்னை கேட்டார்கள்,பிறகு தான் புரிந்தது ஏதோ ஒன்று பறந்து போயிருக்கு என்று.